Monday, July 13, 2015

இரண்டெழுத்து இசை தத்தெடுத்த மூன்றெழுத்து!

உன் இசை கேட்டால் புவி அசைந்தாடும்
இது இறைவன் அருளாகும்!

இன்று காலை எழுந்ததும் நண்பர் முரளி SMS மூலம் அனுப்பியிருந்த துயரச் செய்தியைப் பார்த்தேன். இறப்பை philosophical ஆக எடுத்துக் கொள்வது என் இயல்பு. பதினோரு ஆண்டுகள் முன்பு என் தாயார்  இறந்தபோதும் இது போன்ற மனநிலைதான் எனக்கு இருந்தது. 43 வருடம் முன்பு என் 21ஆவது வயதில் என் தந்தையை இழந்தபோது இருந்த உணர்வுகள் வேறு. அந்த அதிர்ச்சி, நம்ப இயலாத் தன்மை எல்லாம் அந்த மரணத்தோடு போய் விட்டன .

 87 வயதில் உலக வாழ்க்கையைத  துறப்பது எதிர்பாராத விஷயம் அல்ல. ஆயினும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல் தேறி உற்சாகமாகப் பாடி மருத்துவர்களையும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த மற்றவர்களையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தவர் மறைந்து விட்டார் என்ற செய்தி அதிர்ச்சியைத்தான் அளித்தது.

ராஜாஜி இறந்தபோது ஜெயகாந்தன் "சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி சம்பூர்ணமாகி விட்டார்" என்று எழுதினார். சம்பூர்ணம் ஆகி விட்டார்' என்றுதான் எம் எஸ் வியைப் பற்றியும் சொல்ல வேண்டும். எளிய குடும்பத்தில் பிறந்து போராடி, இசைதான் தமக்கு இறைவன் கொடுத்திருக்கும் வரம் என்பதை அறிந்து கொண்டு அந்த இசையை முறையாகப் பயிலும் வாய்ப்பு இல்லாமலேயே தன் சொந்தத் தேடலாலும் முயற்சிகளாலும் மட்டுமே   இசையில் இதுவரை யாரும் எட்டாத பரிமாணங்களை அநாயாசமாகக் கடந்து நம்மையும் பல புதிய உலகங்களுக்கு அழைத்துச் சென்ற இந்த மேதை இன்று இந்த உலகையும் கடந்து சென்றுவிட்டார்.

ராஜாஜியின் மரணம் பற்றி  எழுதிய சுதந்திரப் போராட்ட வீரரும் ராஜாஜியுடன்
நெருக்கமாகப் பழகியவருமான K. சந்தானம் "Rajaji joins the immortals. Conventional words of mourning about his departure will be inappropriate" என்று ஸ்வராஜ்யா பத்திரிகையில் எழுதினார். இதுவும் எம் எஸ் விக்குப் பொருந்தக் கூடிய புகழுரைதான்.

கந்தர்வ இரட்டையர்களில் ஒருவரான எம் எஸ் வி மற்றவரான கண்ணதாசனுடன் இணைந்து விட்டார். இனி இவர்கள் இருவரும் தேவ லோகத்தையும் கந்தர்வ லோகத்தையும் தங்கள் பாடல்களால் உலுக்கிக் கொண்டிருப்பார்கள்.
                                                     Photo Courtesy msvtimes.com

எம் எஸ் வி அமரரான செய்தி கிடைத்ததும் Youtube இல் நான் தொகுத்து வைத்திருக்கும் அவரது  பல பாடல் தொகுப்புகளில் ஒன்றைக் கேட்டேன். 'நெஞ்சம் மறப்பதில்லை,' 'பாவாடை தாவணியில்,' 'சிங்காரப் புன்னகை' போன்ற பாடல்களைக் கேட்டபோது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவர் இருந்தபோதும் அவரது பல பாடல்கள் கண்ணீரை வரவழைத்திருக்கின்றனவே! எனவே வித்தியாசம் எதுவும் இல்லை!

இருந்த போதும் அழ வைத்தீர்கள்
இறந்த பிறகும் அழ வைத்தீர்கள்!

எம் ஜி ஆர் மறைந்தபோது தினமலர் போஸ்டரில்
'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்'
என்ற இரண்டு வரிகளை மட்டும் பிரசுரித்திருந்தார்கள்.

மற்ற எவருக்கும் பொருந்துவதை விட இந்தப் பாடல் வரிகள் இந்தப் பாடலுக்கு  இசை அமைத்த இவருக்குத்தான் அதிகமாகப் பொருந்தும்.

4-12-2010 இல் சென்னை இன் ஃபோஸிஸ் அரங்கில் நடந்த msvtimes.com நான்காவது ஆண்டு விழாவில்,  எம் எஸ் வி இசை அமைத்த படங்கள், பாடல்களின் பெயரை வைத்து அவர் முன்னிலையில் அவருக்கு ஒரு கவிதாஞ்சலி  செய்தேன். அந்தப் பாமாலையயே   இந்த இசை மாமேதைக்கு மலர் வளையமாகச் சமர்ப்பிக்கிறேன்.

http://msv-music.blogspot.in/2011/01/tribute-to-msv.html

Tuesday, June 23, 2015

இசைத்தமிழ் நீ(ங்கள்) செய்த அரும் சாதனை


Photo courtsy: msvtimes.com

உலகில் சில அற்புதங்கள் நடப்பதுண்டு. இந்து மதத்துக்குப் புத்துயிர் ஊட்டிய சங்கரரும் ராமானுஜரும் பிறந்தது வெவ்வேறு காலங்களில் (சங்கரர் காலத்தால் முந்தியவர்) என்றாலும் இருவரும் பிறந்தது சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில்.

நேர்மை மற்றும் எளிமையின் உருவாகத் திகழ்ந்த மகாத்மா காந்தியும் லால் பஹதுர் சாஸ்திரியும் பிறந்தது அக்டோபர் 2 ஆம் தேதி (சாஸ்திரி பிறந்தது காந்தி பிறந்து 35 வருடங்கள் கழித்து.)

அது போன்ற இன்னொரு ஜோடி கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் எம்,எஸ்.விஸ்வநாதனும். (பொதுவாக யாரையும் பட்டப் பெயர் சொல்லி நான் குறிப்பிடுவதில்லை. ஆனால் இந்த இருவரையும் பட்டப்பெயர் சொல்லாமல் என்னால் குறிப்பிட முடிவதில்லை!)

கவியரசர் பிறந்தது 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி. அடுத்த ஆண்டு அதே தேதியில் (24.6.1928) பிறந்தார் இசை அரசர்.

தமிழகத்தில் பிறந்த கண்ணதாசனும், கேரளாவில் பிறந்த விஸ்வநாதனும் சந்தித்து ஒன்று சேர்ந்து தமிழ்த் திரை உலகில் ஒரு சகாப்தம் படைக்க வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை போலும்!

இந்த இருவரைப் பற்றி  msvtimes.com/forum வலைப்பதிவில் "இவர்கள் இருவரும் கந்தர்வர்கள். ஏதோ ஒரு முனிவரின் சாபத்தினால் இந்த உலகில்  வந்து பிறந்திருக்கிறார்கள்" என்று ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்ததை நான் மிகவும் ரசித்தேன். 'சாபத்தினால்' என்ற வார்த்தையைக் கேட்டு யாரும் மனம் சங்கடப்பட வேண்டியதில்லை. நம் புராணங்களில் முனிவர்களின் சாபத்தினால் தெய்வங்கள் கூட  பூமியில் வந்து பிறந்த பல கதைகள் இருக்கின்றன!  மகாபாரதத்தில் வரும் பீஷ்மர், யுதிஷ்டிரர் போன்ற உயர்ந்த பாத்திரங்கள் இவ்வுலகில் வந்து பிறந்தது சாபத்தினால்தான்.

கந்தர்வர்கள் இசையில் உயர்ந்தவர்கள். மிகவும் அற்புதமான பாட்டை கந்தர்வ கானம் என்று சொல்வார்கள். இவர்கள் இருவரும் தங்கள் பாடல்களால் கந்தர்வர்களாக விளங்குகிறார்கள் என்பதுதான் நண்பரின் கருத்து.

கண்ணதாசனும் விஸ்வநாதனும் (விஸ்வநாதன் என்று சொல்லும்போது, விஸ்வநாதன்- ராமமூர்த்தியையும் குறிப்பிட்டுத்தான் சொல்கிறேன்) இணைந்து கொடுத்த பாடல்களில் ஒன்று கூடச் சோடை போனது கிடையாது.

எனக்கு விவரம் அறிந்த காலத்திலிருந்து இவர்கள் பாடல்களையே உணவுடன் சேர்த்து அருந்தி வந்திருக்கிறேன். என்னை வளர்த்ததில் என் தாய் தந்தைக்கு அடுத்தபடியாக இந்த இருவர் இணைந்து கொடுத்த பாடல்களுக்கும் பங்கு உண்டு.

விவரம் புரியாத வயதில் இவர்கள் பாடல்கள் என் மனதில் எத்தனையோ உணர்ச்சிகளை ஏற்படுத்தி இருக்கின்றன. சில சமயம் உடலுக்குள் இனம் புரியாத ஒரு புளகாங்கிதம் ஏற்படும். சில சமயம் ஏதோ ஒரு ஏக்கம் ஏற்படும். சில சமயம் துள்ளிக் குதிக்கலாம் போல் இருக்கும். சில சமயம் கண்களில் கண்ணீர் முட்டும். காரணம் தெரியாது. பல பாடல்களை இப்போது கேட்கும்போதும் அதே உணர்ச்சிகள் எழுகின்றன.

நான் இவர்கள் பாடல்களை ரசிக்கத் துவங்கிப் பல வருடங்களுக்குப் பிறகுதான் பாடல்களை இயற்றியவர் யார், இசை அமைத்தவர் யார் போன்ற விவரங்கள் தெரிய வந்தது. உதாரணமாக 'மணப்பந்தல்' படத்தில் வரும் 'உனக்கு மட்டும் உனக்கு மட்டும்' என்ற பாடல். 1961இல் வெளியான இப்பாடலை முதலில் கேட்டபோது எனக்கு வயது 10 இருக்கும். அந்த வயதில் இந்தப் பாடல் என்னிடம் ஏன் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை!

இந்த இருவரைப் போல் இணைந்து இவ்வளவு அற்புதமான பாடல்களைக் கொடுத்த ஜோடி இவ்வுலகில் வேறொன்று இருந்ததில்லை என்று நினைக்கிறேன். இது போன்ற ஒரு இணை வேறு துறையில் இருந்திருக்குமா என்பதும் சந்தேகம்தான். தமிழ் தெரியாத, (என்னைப் போல்) இசையின் அடிப்படையை அறியாத பல சாதாரண மக்களை இவர்கள் பாடல்கள் உலுக்கி இருக்கின்றன.

கவிஞரின் பாடல் வரிகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு எம்.எஸ்.வி. உயிர் கொடுத்தது போல் வேறு எந்த மொழியிலும் எந்த இசை அமைப்பாளரும் செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஒரு கவிஞர்-இசை அமைப்பாளர் என்ற உறவையும் தாண்டி இவர்கள் இருவருக்கும் இருந்த நெருக்கத்தைப் பார்க்கும்போது msvtimes.com நண்பர் சொன்னது போல் இவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே ஏதோ ஒரு வகையில் இணைந்திருந்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. கண்ணதாசன் பல இசை அமைப்பாளர்களுக்குப் பாடல் எழுதி இருந்தாலும் எம்.எஸ்.வியின் இசையில் அமைந்த பாடல்களுக்கு அவை இணையாகா - கே.வி.மகாதேவன் அவர்கள் இசை அமைத்த கங்கைக்கரைத் தோட்டம், மன்னவன் வந்தானடி போன்ற ஒரு சில பாடல்களைத் தவிர. அதுபோல் எம்.எஸ்.வியிடம் இருந்த நெருக்கம் போல் கண்ணதாசனுக்கு மற்ற இசை அமைப்பாளர்களிடம் இருந்ததில்லை.

எம்.எஸ்.வியைப் பொறுத்தவரை யார் எழுதிய பாடலாக இருந்தாலும் அவரது இசை அமைப்பு golden touch அமைந்ததாகத்தான்ஆகத்தான் இருக்கும். 'அந்த நாள் ஞாபகம்' பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது 'மூச்சுக் காற்றுக்குக் கூட இசை அமைத்திருக்கிறார் எம்.எஸ்.வி.' என்று ஏ.வி.எம் சரவணன் அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது! ஆயினும் கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமைப்பதற்கென்று என்றே தனது ஆர்மோனியத்தில் ஒரு தனிப் பகுதியை ஒதுக்கி வைத்திருப்பார் போலும் எம்.எஸ்.வி.!

கவிஞர் வாலி எழுதிய எனக்கொரு காதலி இருக்கின்றாள் என்ற பாடலைக் கேட்கும்போது இந்தப் பாடல் கண்ணதாசனையும் எம்.எஸ்.வியையும் குறித்து எழுதப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆர்வமுள்ளவர்கள் இது பற்றிய எனது பதிவை இங்கே பார்க்கலாம்.
http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=1534&highlight=enakkoru+kadhali

திரை இசையில்  எல்லாப் பரிமாணங்களையும் அனாயாசமாகக் கையாண்டவர் எம்.எஸ்.வி. அவருக்குப் பின்னால் வந்த இசை அமைப்பாளர்கள் செய்ததாகச் சொல்லிக்கொள்ளும் சாதனைகளை அவர் பல வருடங்களுக்கு முன்பே சத்தமில்லாமல் செய்து விட்டு அமைதியாக இருக்கிறார். உதாரணமாக 1970 ஆம் ஆண்டில் Thrilling Thematic Tunes என்ற ஆல்பத்தை அவர் ஸ்டீரியோ இசையில் அமைத்திருக்கிறார். ஆனால் தமிழின் முதல் ஸ்டீரியோ பதிவு இதற்கு எட்டு வருடம் கழித்துத்தான் நடந்ததாகச் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறாகள்.

Fusion என்று சொல்லப்படும் கலவை இசையை இவர் 1958இல் வெளியான பதி பக்தியிலேயே ராக் ராக் ராக் என்ற பாடலில் அமைத்திருக்கிறார் 'அடாணா' ராகமும்,'ராக் அண்ட் ரோல்' இசையும் இணைந்து ஒலிக்கும் பாடல் இது). ஜாஸ் (வர வேண்டும் ஒரு பொழுது - கலைக்கோவில் மற்றும் பல பாடல்கள்), வால்ட்ஸ் (கண்ணிரண்டும் மின்ன மின்ன - ஆண்டவன் கட்டளை) போன்ற மேற்கத்திய இசையின் பல வடிவங்களை மிக இயல்பாகக் கையாண்டிருக்கிறார். 1960 ஆம் ஆண்டுக்கு முன்பே சிம்பனி என்ற இசை வடிவையும் இவர் கையாண்டிருப்பதாக இசையின் பரிமாணங்களை அறிந்த என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

'கர்ணன்' படத்தில் இவர் ஹிந்துஸ்தானி ராகங்களையும் இசைக்கருவிகளையும் கையாண்ட அளவுக்கு ஹிந்திப் பட இசை அமைப்பாளர்கள் கூடக் கையாண்டதில்லை!

மெல்லிசை என்பதற்கு ஒரு புதிய வடிவம் கொடுத்தவர் இவர். எம்.எஸ்.வி. போட்ட பாதையில்தான் தாங்கள் செல்கிறோம் என்று இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யா சாகர், தேவா, பரத்வாஜ் போன்ற பல இசை அமைப்பாளர்களும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
இசை நுணுக்கம் அறிந்த கமலஹாசன் 'தமிழ்த் திரை இசையில் எம்.எஸ்.வியின் பாதிப்பு இல்லாமல் யாராலும் இசை அமைக்க முடியாது' என்று சொல்லி இருக்கிறார்.

கர்நாடக சங்கீதத்தைப் பொறுத்தவரை, மற்ற பல இசை அமைப்பாளர்களைப் போல் எம்.எஸ்.வி. குறிப்பிட்ட ராகங்களில் இசை அமைப்பதில்லை (ஒரு சில பாடல்களைத் தவிர) 'கவிதைக்குள் இசை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதுதான் என் வேலை' என்பார் எம்.எஸ்.வி.

ஒரு பாடலை அவரிடம் கொடுத்தால் அதைப் படித்து அதன் பொருளைப் புரிந்து கொண்டு அந்தப் பாடலுக்கு மெட்டு அமைப்பார் எம்.எஸ்.வி. அவர் பாடல்களின் அழகைப் பார்த்து கல்யாணி, காம்போதி, மோஹனம், பைரவி போன்ற ராகங்கள் அவர் பாட்டுக்குள் போய் சில இடங்களில் அமர்ந்து கொள்ளும். அவர் பாடலை ஆய்வு செய்பவர்கள், இது கல்யாணி போலவும் இருக்கிறது, மோஹனம் போலவும் இருக்கிறதே என்று குழம்புவது இதனால்தான்.

'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடலைக் கேட்ட லால்குடி ஜெயராமன் அவர்களுக்கு இது போன்ற ஒரு குழப்பம் ஏற்பட்டு அவர் கர்நாடக இசை விமர்சகர் சுப்புடுவிடம் கேட்க, சுப்புடு, "விஸ்வநாதனின் பாடல்கள் அவரே உருவாக்கிய ராகங்களில் அமைந்தவை. எனவே அவற்றுக்கெல்லாம் 'விஸ்வ கல்யாணி,' 'விஸ்வ மோஹனம்,' 'விஸ்வ பைரவி' என்றெல்லாம்தான் பெயர் வைக்க வேண்டும்" என்றாராம். யாரையுமே எளிதில் பாராட்டாத சுப்புடு அவர்களிடமிருந்து வந்த இந்த வார்த்தைகளை விடப் பெரிய பாராட்டு வேறென்ன இருக்க முடியும்?

எம்.எஸ்.வியுடன் சேர்ந்து 'சங்கமம்' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார் மகாராஜபுரம் சந்தானம் அவர்கள். நாரத கான சபாவில் நடந்த இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்ட நான் , "நான் எம்.எஸ்.வியின் ரசிகன்" என்று சந்தானம் அவர்கள் கூறியதைக் கேட்டுப் புல்லரித்துப் போனேன்.

"எம்.எஸ்.வியின் இசையை நான் கூர்ந்து கேட்பேன். அவர் பாடல்களில் இருக்கும் சில அற்புதமான சங்கதிகளை என் பஜனைப் பாடல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வேன்" என்று பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் அவர்கள் ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

எம்.எஸ்.வியுடன் இணைந்து பணியாற்றிய கர்நாடக இசைக் கலைஞர் ஜி.எஸ்.மணி அவர்கள், "எம்.எஸ்.வியுடன் இணைந்து பணியாற்றியதால் என் கர்நாடக இசைத்திறன் மெருகேறி இருக்கிறது" என்று msvtimes.com நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார்.

கண்ணதாசன் - விஸ்வநாதன் இணையின் இசைப்பங்களிப்பு திரை இசையைத் தாண்டியும் அமைந்திருக்கிறது. இவர்கள் படைப்பில் வந்த கிருஷ்ண கானம் என்ற ஆல்பத்துக்கு இணையாக வேறு பக்திப் பாடல்களைக் குறிப்பிட முடியுமா? 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,' 'ஆயர்ப்பாடி மாளிகையில்' என்ற இரண்டு பாடல்களும் பக்திப் பாடல் வரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் என்பது எனது கருத்து. இது தவிர, தேவாரம், திருவாசகம், அய்யப்பன் பாடல்கள், அம்மன் பாடல்கள் என்று பல பக்திப்  பாடல் ஆல்பங்களை உருவாகி இருக்கிறார் எம்.எஸ்.வி.

1962 ஆம் ஆண்டில் நடந்த சீனப்போரின்போது 'சிங்கநாதம் ஓடுது' என்ற ஒரு குறும் படம் எடுக்கப்பட்டது. சிவாஜி, ஜெமினி, சாவித்திரி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இத்திரைப்படத்தை இயக்கியவர் திரு பீம்சிங் என்று நினைக்கிறேன். சென்னை போன்ற ஒரு சில நகரங்களில் மட்டுமே (திரைப்படத்துக்கு முன்பு வரும் செய்திப்படம் போல்) திரையிடப்பட்ட இந்தப் படத்தை ஒரு கிராமத்தில் வசித்த என்னால் வானொலியில் ஒலிச்சித்திரமாகத்தான் கேட்க முடிந்தது. கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்த 'சிங்க நாதம் கேட்குது, சீன நாதம் ஓடுது,' என்ற பாடல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் எல்லாம் இப்போது கிடைக்குமா என்றே தெரியவில்லை.

சென்னையில் பிர்லா கோளரங்கம் துவக்கப்பட்டபோது அதன் நிகழ்ச்சிகளுக்குப் பின்னணி இசை அமைத்தவர் எம்.எஸ்.விதான் என்று ஒரு பத்திரிகையில் படித்தேன். அந்த இசை இப்போது மாற்றப்பட்டிருக்கலாம்.

இந்திப்பட இசை அமைப்பாளர்கள் பலருக்கு எம்.எஸ்.வியின் மீது பெரு மதிப்பு உண்டு. எம்.எஸ்.வியால் தனது குரு என்று கருதப்படும் நௌஷத் அலி அவர்கள் பங்கேற்ற ஒரு விழாவில் ஒருவர் எம்.எஸ்.வியை 'தென்னாட்டு நௌஷத் அலி (Naushad Ali of the South)' என்று குறிப்பிட்டபோது, நௌஷத் அலி  "நான் 'வட நாட்டு எம்.எஸ்.வி (MSV of the North)' என்று அழைக்கப்படுவதையே விரும்புவேன்" என்றார்.


'சிவந்த மண்' படத்துக்காக 'ஒரு ராஜா ராணியிடம்' பாடலுக்கு எம்.எஸ்.வி இசை அமைப்பதை நேரில் பார்த்த இசை அமைப்பாளர் ஜெய்கிஷன், அந்த நீண்ட பாடலுக்கு எம்.எஸ்.வி. சுமார் நான்கு மணி நேரத்தில் இசை அமைத்து விட்டதைப் பார்த்துப் பிரமித்து, "இது போன்ற ஒரு பாடலுக்கு இசை அமைக்க எங்களுக்குப் பத்து நாட்கள் பிடிக்கும்!" என்று சொல்லி வியந்து எம்.எஸ்.விக்கு ஒரு ஆர்மோனியபெட்டியைப் பரிசளித்து விட்டுச் சென்றார்.

எம்.எஸ்.வியின் சாதனைகளையும் பெருமைகளையும் சொல்லிக்கொண்டே போகலாம். இதை ஒரு பாரதம் போல் விரிவாகச் சொல்ல ஒரு வியாசரும், அதை எழுத ஒரு விநாயகரும் வேண்டும்!

எம்.எஸ்.வி. அவர்கள் பாவத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதற்கு ஒரே ஒரு சான்று. பாலசந்தரின் திரைப்படங்களின் துவக்கத்தில் 'அகர முதல' என்ற திருக்குறள் வரும். ஆரம்ப காலங்களில் இதைப் பாடியவர் எம்.எஸ்.வி. பிற்காலத்தில் வேறொரு இசை அமைப்பாளரின் குரலில் இதைப் பாட வைத்து மாற்றி விட்டார் பாலசந்தர்.

இங்கே அவரது இரண்டு திரைப்படங்களுக்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். திரைப்படங்களின் துவக்கத்தில் வரும்  'அகர முதல..' என்ற திருக்குறளை மட்டும் கேளுங்கள். 'அவள் ஒரு தொடர்கதை'யில் இதைப் பாடி இருப்பவர் எம்.எஸ்.வி. 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் இதைப் பாடி இருப்பவர் இன்னொருவர். எம்.எஸ்.வி. பாவத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.தமிழ் மொழி பற்றிய மூன்று பாடல்களுக்கு இசை அமைக்கும் பெருமை எம்.எஸ்.விக்குக் கிடைத்திருக்கிறது.

மனோன்மணி சுந்தரம் பிள்ளை எழுதிய 'நீராடும் கடலுடுத்து' என்று துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து. 1968ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்காக இசை அமைக்கப்பட்ட இப்பாடல் அன்று முதல் இன்று வரை தமிழக அரசின் நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப் படுகிறது.

பாரதிதாசன் எழுதிய 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற பாடலுக்கு 'பஞ்சவர்ணக்கிளி' படத்துக்காக இசை அமைத்தார் எம்.எஸ். வி. மயக்கும் இனிமை கொண்ட மெட்டும், அடுக்கடுக்காய் வந்து விழும் வாத்தியக் கருவிகளின் இசை அழகும் சேர்ந்து இந்தப் பாடலைத் தமிழ்த்தாய்க்கு ஒரு அழகான அணிகலனாகத் திகழச் செய்கிறது.

மூன்றாவதாக 'கலங்கரை விளக்கம்' படத்துக்காக பாரதிதாசனின் 'சங்கே முழங்கு' என்ற பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார் எம்.எஸ்.வி. இது தமிழர் பண்பாட்டையும், பெருமைகளையும் பெருமிதத்துடன் பறை சாற்றும் ஒரு அற்புதமான பாடல்.

கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், தமிழ்த்தாய்க்கு வணக்கத்தைத் தெரிவிக்கும் 'நீராடும் கடலுடுத்த' இயற்றமிழைக் குறிப்பதாகவும், தமிழின் இனிமையைக் கொஞ்சும் இசையில் கூறும் 'தமிழுக்கும் அமுதென்று பேர்' இசைத்தமிழைக் குறிப்பதாகவும்', தமிழர் பண்பாட்டையும், தமிழர் ஒற்றுமையையும் உரத்த குரலில் பறை சாற்றும்  'சங்கே முழங்கு' நாடகத் தமிழைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

எனவே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் பெருமையை நிலை நாட்டும் வகையில் இந்த மூன்று பாடல்களை அமைத்திருக்கிறார் எம்.எஸ்.வி என்று கொள்ளலாம். அரசு இவருக்குக் கொடுக்கத் தவறிய அங்கிகாரத்தை விடப் பல மடங்கு சிறப்பான அங்கிகாரத்தைத் தமிழ் தெய்வம் இந்த இசை மேதைக்கு வழங்கி இருக்கிறது. இதை விட வேறென்ன பெருமை வேண்டும்?

தமிழ்த்தாயின் தவப் புதல்வரான கண்ணதாசானின் மீது  இசைத்தாய் அன்பு கொண்டு அவரது பாடல்களை எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன், ஜி.ராமநாதன் போன்றோரின் இசை அமைப்பில்  சிரஞ்சீவித்துவம் கொண்ட பாடல்களாக இவ்வுலகில் நிலை பெறச் செய்திருக்கிறாள்.

இசைத்தாயின் தவப்புதல்வரான எம்.எஸ்.வியின் மீது தமிழ்த்தாய் அன்பு கொண்டு அவர் மூலம் இயல், இசை, நாடகம் என்ற தனது மூன்று வடிவங்களுக்கும் காலத்தால் அழியாத இசை வடிவம் அமைக்கச் செய்திருக்கிறாள்.

தமிழாலும் இசையாலும் ஒன்று பட்டு, இசையையும் தமிழையும் வளர்த்த இந்த இரு கலை மேதைகளின் பிறந்த நாட்கள் ஒன்றாக அமைந்திருப்பது தற்செயலாக அமைந்த செயல் அல்ல!


Monday, April 13, 2015

"தமிழ்ப்" புத்தாண்டு வாழ்த்துக்கள்


அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இன்று புத்தாண்டுதான். ஆனால் இது தமிழ்ப் புத்தாண்டுதானா என்பது குறித்து எனக்கு ஐயப்பாடு உண்டு.

சரி. இன்று பிறந்திருக்கும் புதிய ஆண்டின் பெயர் என்ன? உங்களில் எத்தனை பேர்  பஞ்சாங்கத்தைத் தேடி ஓடுகிறீர்கள், எத்தனை பேர் புத்திசாலித்தனமாக இன்னொரு வலைப் பக்கத்தைத் திறந்து முக்காலும் உணர்ந்த முழு அறிஞர் கூகுள்  தாத்தாவின் உதவியை நாடுகிறீர்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

கண்டு பிடித்து விட்டீர்களா மன்மத ஆண்டின் பெயரை?

சரி அடுத்த கேள்வி. இந்த முறை பஞ்சாங்கம், கூகுள் போன்ற வழிகாட்டிகளை நாடாமல் பதில் சொல்லுங்கள்.

தமிழ் ஆண்டுகள் எத்தனை?

'அறுபது' என்று சொன்னவர்கள்  உஙளுக்கு நீங்களே ஐந்து மதிப்பெண்கள் போட்டுக் கொள்ளுங்கள்!

அடுத்த கேள்வி. இதற்கும் சரியாக பதில் சொன்னால் இன்னொரு ஐந்து மதிப்பெண்கள் உண்டு.

முதல் தமிழ் ஆண்டின் பெயர் என்ன?

இதற்கு பதில் தெரிந்தவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள், அவர்களில் நீங்கள் ஒருவராக இருந்தால், 'பழைய பஞ்சாங்கம்' என்று உங்களுக்குப் பட்டம் சூட்டி மகிழ்கிறேன்.

இந்தப் பெயர்களை நீங்கள் பஞ்சாங்கத்தில்தான் பார்க்க முடியும்! இதோ அறுபது வருடங்களின் பெயர்கள். அடுத்த ஆண்டு நான் இதே கேள்வியைக் கேட்டால் நீங்கள் சரியாக பதில் சொல்லிப் பரிசு வாங்கலாம்!

1. பிரபவ 2. விபவ 3. சுக்ல  4. பிரமோதூத  5. பிரஜோத்பத்தி  6. ஆங்கிரஸ  7.ஸ்ரீமுக  8. பவ  9.யுவ  10.  தாது  11.ஈஸ்வர  12.வெகுதான்ய  13.பிரமாதி 14.விக்ரம 15.விஷு  16.சித்ரபானு  17.சுபானு   18.தாரண  19.பார்த்திப  20.விய  21.சர்வஜித்  22. சர்வதாரி  23.விரோதி 24.விக்ருதி  25.கர  26.நந்தன  27.விஜய  28.ஜய  29.மன்மத  30.துர்முகி  31.  ஹேவிளம்பி  32.விளம்பி  33.விகாரி  34.சர்வாரி  35.பிலவ  36.சுபகிருது  37.  சோபகிருது  38.குரோதி 39.  விஸ்வாவசு  40.பராபவ  41.பிலவங்க  42.கீலக  43.சௌமிய  44.சாதாரண  45.விரோதிகிருது  36.பரிதாபி  47.பிரமாதீச  48.ஆனந்த  49.ராட்சஸ  50.நள 51.ப்ங்கள  52.காளயுக்தி  53.சித்தார்த்தி  54.ரௌத்ரி  55.துன்மதி  56.துந்துபி   57.ருத்ரோத்காரி                        58. ரக்தாக்ஷி  59.குரோதன  60.அக்ஷய

எதற்கு இந்தப் பெயர்கள் எல்லாம் என்று கேட்கிறீர்களா?

அடுத்த கேள்வி கேட்கத்தான். ஆனால் இந்தக் கேள்விக்கு நீங்கள் புத்தகத்தைப் பார்த்தே பதில் சொல்லலாம்!

மேலே உள்ள பெயர்களில் எத்தனை பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்?

கூட்டிக் கழித்துப் பார்த்து விட்டு '0' என்று பதில் சொன்னால் உங்களுக்கு முழு மதிப்பெண்கள்!

இந்தக் கேள்வி என் பள்ளி நாட்களிலேயே  "தமிழ்" வருடங்களின் பெயர்களைப் படித்தபோதே என் மனதில் எழுந்தது.

கேள்வி பிறந்தது அன்று
பதில் கிடைக்கவில்லை இன்றுவரை!

முழுக்க முழுக்க சம்ஸ்கிருதப் பெயர்களைக் கொண்ட இவற்றை எப்படித் தமிழ் வருடங்கள் என்று சொல்கிறோம்? எங்கேயோ உதைக்கிறது.

'தமிழ்ப் புத்தாண்டு' என்ற பெயரே வினோதமாக இருக்கிறது. ஒரு மொழியின் பெயரில் ஒரு கால அட்டவணையா (calendar? மறுபடியும் உதைக்கிறது.

சிலர் சம்ஸ்கிருதப் பெயர்கள் பலவற்றை நாம் பயன்படுத்தவில்லையா என்று கேட்பார்கள். பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றைத் தமிழ்ப் படுத்தித்தான் பயன்படுத்துகிறோம். சம்ஸ்கிருதத்தில் கிருஷ்ணஹ என்று இருப்பதைத் தமிழில் கிருஷ்ணன் என்று சொல்கிறோம். அதுபோல் பிரபவ என்ற பெயர் பிரபவம் என்றாவது மாற்றப்பட்டிருக்க வேண்டும். இதற்கும் ஒரு பதில் இருக்கும். பெயருக்குப் பின் வருடம் என்று வருவதால் பிரபவம் வருடம் என்று சொன்னால் சரியாக இருக்காது. பிரபவ வருடம் என்றால்தான் இயல்பாக இருக்கும். இந்த வாதத்தின்படி பார்த்தால் கும்பகோணம் நகரம் என்று சொல்லக்கூடாது, கும்பகோண நகரம் என்றுதான் சொல்ல வேண்டும்!

முழுக்க முழுக்க சம்ஸ்கிருதப் பெயர்களைக் கொண்ட ஒரு கால அட்டவணையைத் தமிழ்க் கால அட்டவணை (Tamil calendar) என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது.

சித்திரை முதல் நாளில் நாம் கொண்டாடும் இந்தப் புத்தாண்டை 'இந்துப் புத்தாண்டு' என்று அழைக்கலாம், தமிழ்ப் புத்தாண்டு என்று அழைப்பதில் பொருத்தம் இல்லை. ஆனால் நாம் இதை 'இந்துப் புத்தாண்டு என்று சொன்னால் மற்ற மாநிலங்களில் உள்ள இந்துக்கள் ஏற்க மாட்டார்கள்.

ஆனால் தமிழர்கள் மீது எதை வேண்டுமானாலும் திணிக்கலாம். ஆயிரக்கணக்கான வருடங்களாக நாம் விநாயக சதுர்த்தியைக் கொண்டாடும் விதத்தை மாற்றி மஹாராஷ்டிராவில் கொண்டாடுவது போல் ஊர்வலமாகப் போய்க் கடலில் சிலைகளைக் கடலில் கரைப்பது என்ற முறையை நம் மீது திணிக்கவில்லையா! நாமும் அதைச் சற்றும் தயங்காமல் ஏற்றுக்கொள்லவில்லையா?அதுபோல்தான் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு விவகாரமும்!

என்னைப் பொறுத்தவரை சித்திரைத் திங்கள் முதல் நாளில் நாம் கொண்டாடுவது இந்துப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு இல்லை!

Sunday, April 12, 2015

நிறுத்துங்கள் தமிழ்க் கொலையை!

இன்று தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்ச்சி பார்த்தேன். 'தமிழோடு விளையாடு.' ஆஹா, அழகான தமிழ்ப் பெயராக இருக்கிறதே என்று நினப்பதற்குள், 'powered by' என்று ஆங்கிலம் வந்து விட்டது!

ஒரு நிகழ்ச்சிக்குத் தமிழில் பெயர் வைப்பவர்கள், (நிகழ்ச்சியை) 'வழங்குபவர்கள்' என்று தமிழில் சொல்லலாமே! 'powered by' என்று சொன்னால்தான் நிகழ்ச்சியின் பெயருக்குச் சக்தி பிறக்குமோ?

'சக்தி பிறக்குது மூச்சினிலே' என்று பாடிய பாரதி மூச்சடைத்துப் போயிருப்பார் இப்படிப்பட்ட தமிழ்க் கொலைகளைக் கண்டு (கேட்டு)!

தமிழ்க் கொலைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று பல ஆங்கிலச் சொற்களுக்கிடையே சில தமிழ்ச் சொற்களைப் பேசி விட்டு அதைத் தமிழ் நிகழ்ச்சி என்று சொல்லிக் கொள்வது. இது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாள்தோறும் நடக்கிறது.

'தூய தமிழில் பேசுவது எப்படி' என்று ஒரு நிகழ்ச்சியை ஒரு தமிழ்ப் பற்று கொண்ட ஒரு தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்புவதாக வைத்துக் கொள்வோம். நிகழ்ச்சியை எப்படி அறிவிப்பார்கள்?  'தூய தமிழில் பேசுவது எப்படி?...  ஸ்பான்ஸர்ட் பை..!.'

இன்னொருவகைக் கொலை, செய்திகள் போன்ற தமிழ் நிகழ்ச்சிகளிலேயே தமிழைக் கொலை செய்வது. இந்தக் கொலையும் அடிக்கடி நடக்கிறது. மிகவும் அதிகமாக நடக்கும் ஒரு வகைக் கொலை பன்மை எழுவாய்க்கு ஒருமை  வினைச்சொல்லைப் பயன்படுத்துவது. என்ன புரியவில்லையா? அதாவது plural subject-க்கு singular verb-ஐப் பயன்படுத்துவது. இப்போது புரிகிறதா?

பரிசுகள் வழங்கப்பட்டது போன்ற பயன்பாடுகளை அடிக்கடி கேட்கலாம். இதுவரை கேட்ட்டதில்லை என்றால், இனி கவனித்துக் கேளுங்கள். நிறயவே கேட்பீர்கள்!

தமிழை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற அலட்சிய மனப்பான்மை பலரிடமும் பெருகி விட்டது. நாம் கற்ற மொழியான ஆங்கிலத்தில் பேசும்போது சிறு தவறு நேர்ந்தால் கூட அதைப் பெருமளவில் எள்ளி நகையாடும் இலக்கணப் பிரியர்கள், தமிழ் மொழிப் பயன்பாட்டில் செய்யப்படும் பெரும் தவறுகளையும் அபத்தங்களையும் கண்டு கொள்வதில்லை.

'ஒவ்வோரு பூக்களுமே சொல்கிறதே' என்ற திரைப்படப் பாடலைப் பலரும் கேட்டிருப்பீர்கள். பாடலில் உள்ள கருத்துக்களுக்காகப் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்ற பாடல் இது. இதில் எனக்கு வேறு கருத்து இல்லை.

ஆனால் இந்த வரியை ஆங்கிலத்தில் அப்படியே மொழி பெயர்த்துப் பாருங்கள்.
'Every flowers says' என்று வரும். இப்படி ஒரு வாக்கியத்தை யாராவது ஆங்கிலத்தில் பேசியோ, எழுதியோ இருந்தால் ஆங்கிலப் பிரியர்களான நாம் அவரைச் சும்மா வீட்டிருப்போமோ? 'ஐயோ அடிப்படை ஆங்கிலம் கூடத் தெரியவில்லையே இவருக்கு!  என்று அவரை  எள்ளி நகையாடிக் கூனிக் குறுகிப் போயிருக்கச் செய்திருக்க மாட்டோமா?

ஆனால் தமிழில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். தமிழ் இலக்கணத்தைப் பற்றி நமக்கென்ன கவலை? அப்படி யாராவது தவறைச் சுட்டிக் காட்டினால் கூட 'வேறு வேலை இல்லை இவருக்கு!' என்று அவரைச் சிறுமைப் படுத்துவோம்!

ஆங்கிலம் கலக்காமல் தமிழ்ப் பேச்சு இல்லை என்று ஆகி விட்டது. சரி, இதை மாற்ற முடியாது. இன்றைய நிலையில், ஆங்கிலம் கலக்காமல் யாராவது தமிழ்  பேசினால் அது செயற்கையாகத் தோன்றும். சிலருக்குக் கோமாளித்தனமாகக் கூடத் தோன்றலாம்! எந்த அளவுக்கு ஆங்கிலத்தைக்  கலப்பது என்று ஒரு வரைமுறையாவது வைத்துக் கொள்ளலாமே. இதை யாரும் வரையறுக்க முடியாது என்பது உண்மைதான். ஆயினும் தமிழ் பேசுபவர்கள் தங்கள் மனச்சாட்சியைக் கலந்து கொண்டு எந்த அளவுக்கு ஆங்கிலம் கலக்கலாம் என்று முடிவு செய்து கொள்ளலாமே!

முன்பெல்லாம் பால்காரர்கள் வீடுகளுக்குப் பால் ஊற்றுவார்கள் (சப்ளை செய்வார்கள் என்று சொன்னால்தான் புரியுமோ?) அப்போதெல்லாம் பால் வாங்குபவர்கள் பால்காரர்களிடம், "என்னப்பா பாலில் தண்ணீர் கலக்கிறாயா அல்லது தண்ணீரில் பால் கலக்கிறாயா?' என்று வேடிக்கையாகக் கேட்பது என்பது வாடிக்கையாக நடக்கக் கூடிய ஒன்று.

பாலில் தண்ணிர் கலப்பது வியாபாரம். தண்ணிரில் பாலைக் கலப்பது மோசடி. ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசுவதும் அப்படித்தான். அன்பு கூர்ந்து தமிழில் (அளவாக) ஆங்கிலம் கலந்து பேச முயற்சி செய்யலாமே. 'ட்ரை பண்ணுகிறேன்' என்று சிலர் சொல்வது என் காதுகளில் விழுகிறது. நன்றி!
Saturday, April 11, 2015

சாத்தான் ஓதும் வேதம்

'Extrovert,' 'Introvet' சொற்களைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். தமிழில் இவற்றுக்குச் சமமான வார்த்தைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. 'உட்புறப் பார்வை கொண்டவர்கள்,' 'வெளிப்புறப்பார்வை கொண்டவர்கள்' என்றெல்லாம் கடுமையாக மொழிமாற்றம் செய்ய விரும்பவில்லை. எளிதாகப் பொருள் விளங்க வேண்டுமானால் 'அமைதியானவர்கள்,' 'கலகலப்பானவர்கள்' என்று சொல்லலாம்.

இந்த இரண்டில் எந்த வகையாக இருப்பதிலும் சாதக பாதகங்கள் உண்டு. இந்த வகையாக இருப்பதுதான் சரி என்று வகுப்பது சரியாக இருக்காது.

பெரும்பாலானவர்கள் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பார்கள். இவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் எந்த நிலைக்கும் மாறிக் கொள்ளலாம்!

பொதுவாக Introverts-க்கு நண்பர்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பார்கள். இவர்கள் அதிக நேரம் தனிமையில் இருக்க நேரிடும். சிலர் இந்தத் தனிமையை விரும்புவார்கள். சிலர் விரும்ப மாட்டார்கள்.

தனிமையை விரும்பாதவர்கள் தனிமையிலிருந்து எப்படி விடுபடுவது என்ற கவலையிலும், மனப்போராட்டத்திலும் விரக்தி அடைவார்கள்.

தனிமையை விரும்புபவர்கள், தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு படிப்பிலோ வேறு பொழுதுபோக்குகளிலோ தங்களை ஈடுபடுத்திக்கொண்டு மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைவார்கள். இந்த அனுபவம் அவர்களை மேலும் தனிமையை நாடச் செய்யும். அவர்கள் இன்னும் தீவிரமான Introverts-ஆக மாற வாய்ப்பு உண்டு.

கலகலப்பானவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். பெரும்பாலும் மற்றவர்களுடன் இருப்பதால் இவர்களிடம் உற்சாகம், தன்னம்பிக்கை ஆகிய ஊக்கிகள் அதிகமாக இருக்கும். இவர்கள் முதுகுக்குப் பின்னே இவர்களை , 'போர்,' 'ஓட்டை வாயன்,' 'ஆளை விட மாட்டான். பேசிப் பேசியே கொன்று விடுவான்' என்றெல்லாம் சிலர் பேசலாம்.

ஆயினும் மொத்தமாகப் பார்க்கும்போது, இவர்கள்  popular-அக இருப்பார்கள். அதாவது இவர்கள் நட்பை விரும்புபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். Contacts, Network போன்ற வியாபாரத்துக்கு உதவும் சங்கதிகளை இவர்கள் நிரம்பப் பெற்றிருப்பார்கள். அதனால் இவர்கள் தங்கள் contacts-ஐ வியாபார நோக்கில் பயன்படுத்துவார்கள் என்பது பொருளல்ல.

எனக்குத் தெரிந்த பல Extrovertsகள் சுயநலம் இல்லாமல் தங்கள் contacts-ஐப் பொதுநலத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். நட்பு என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாத பல Extroverts உண்டு.

நீஙல் Extrovert-ஆ Introvert-ஆ?

என் அனுபவத்தில், இந்தக் கேள்விக்குச் சட்டென்று பதில் சொல்லப் பலரும் தயங்குவார்கள். இதற்கு ஒரு முக்கியமான காரணம், இந்த இரண்டில் எதுவாக இருப்பதில் பெருமை உண்டு என்று அவர்கள் தீர்மானிக்க முடியாததால்தான்! நான் தன்னம்பிக்கை வகுப்புகளை நடத்தும்போது இந்தத் தயக்கத்தைப் பார்த்திருக்கிறேன்.

நான் முன்பே சொன்னதுபோல், இதில் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று எதுவும் இல்லை.

இது ஒருவரின் இயல்பான குணமாக இருக்கலாம் . ஆயினும் காலப்போகில் சூழ்நிலைகளின் தாக்கத்தினால் இந்த நிலை மாறக்கூடும்.

நான் Introvert-தான். இதனால் எனக்கு நன்மைகள், இழப்புகள் இரண்டுமே ஏற்பட்டிருக்கின்றன. இழப்புகளே அதிகம் என்பது எனது மதிப்பீடு.

சமீபத்தில் நான் படித்த ஒரு செய்திதான் இந்தப் பதிவை நான் எழுதக் காரணம்.

மர்ரே மாநிலப் பலகலைக் கழகம், வேக் வனப் பல்கலைகழகம் ஆகியவை தனிதனியே நடத்திய  ஆராய்ச்சிகளின் முடிவுகள் Extroverts-க்கே சாதகமாக இருக்கின்றன.

Fortune 1000 பட்டியலில் வரும் உலகின் மிகச் சிறந்த ஆயிரம் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளில் மிகப் பெரும்பாலோர் Extrovets-தான்.  உயர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கான வாய்ப்பு Introverts-ஐ விட Extroverts-க்கேஅதிகம் இருக்கிறது. அத்துடன் Introverts-ஐ விட Extroverts-ஆலேயே தங்கள் வேலை, சொந்த வாழ்க்கை இரண்டையும் ஒருசேர நிர்வகிக்க முடிகிறது.

இதைப் படிக்கும் உங்களில் Extroverts இருந்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். Introvets இருந்தால், உங்களை மாற்றிக்கொள்ள முயலுங்கள். இது மிகவும் சுலபம். வாய் திறந்து அதிகம் பேச வேண்டும், அவ்வளவுதான். உளறினாலும் பரவாயில்லை. அதுவும் அதிகம் பேரிடம் பேச வேண்டும், அறிமுகம் இல்லாதவர்கள் உட்பட.

அறிமுகம் இல்லாதவர்களுடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொள்ள உங்களிடம் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் இருக்கிறது. அதன் பெயர் புன்னகை. நீங்கள் யாரிடமாவது பேச முயன்று அவர்கள் சரியாக பதில் சொல்லா விட்டால், 'ஓஹோ! இவர் Introvertபோலிருக்கிறது!' என்று பரிதாபப் பட்டு விட்டு, விலகி விடுங்கள்.

நான் முன்பே சொன்னபடி, நான் ஒரு Introvert. இந்தப் பதிவின் தலைப்பின் பொருள் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும்!

Friday, April 10, 2015

காலம் கெட்டு விட்டதா?


1980களில் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் மொழியை நாம் உபயோகிப்பதில் முன்பு இருந்ததற்கும், அப்போது (80-களில்) இருந்ததற்குமான சில மாற்றங்களை ஒரு நகைச்சுவைக் கட்டுரையாக வெளியிட்டிருந்தார்கள். உதாரணமாக 'முன்பெல்லாம் வயதில் பெரியவர்களைப் 'பெரியவர்' என்று மரியாதையாகக் குறிப்பிடுவோம். இப்போது 'பெரிசு' என்று சொல்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். மற்ற உதாரணங்கள் எனக்கு நினைவில்லை.


எண்பதுகளில் இந்த மாற்றம் என்றால், இப்போது?

பெரியவர்களிடம் மரியாதை குறைந்து விட்டதா?

இந்தக் கேள்விக்கு விடை காணுமுன், இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

1962-இல் வெளியான 'பாச மலர்' படத்தில் இடம் பெற்ற 'எங்களுக்கும் காலம் வரும்' என்ற பாடலின் பல்லவி இது.

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால்
அனைவரையும் வாழ வைப்போமே!

என்ன ஒரு பரந்தன சிந்தனை! 'எனக்கு வாழ்வு வரும்போது நான் மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும்' என்ற இந்த உயர்ந்த எண்ணத்தைப் பாடலில் வடித்தவர் கண்ணதாசன்.

எண்பதுகளின் இறுதியில் வெளியான 'படிக்காதவன்' என்ற படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றிருந்தது. தன் தம்பி  பாஸ் செய்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் கதாநாயகன் பாடுகிறான்:
'சொல்லி அடிப்பேனடி!'

இவர் தம்பி பாஸ் செய்ததற்கு இவர் மற்றவர்களை அடிப்பாராம்! எப்படி இருக்கிறது!

இது ந்ச்சயமாக மதிப்பீடுகளின் வீழ்ச்சியைத்தான் காட்டுகிறது.

இப்போது முந்தைய கேள்விக்கு வருவோம். பெரியவரை 'பெரிசு' என்று குறிப்பிடுவது மரியாதையான பழக்கங்கள் தேய்ந்து விட்டதைக் காட்டுகிறதா?

நான் அப்படி நினைக்கவில்லை. வார்த்தைகளில் மாற்றம் ஏற்பட்டு விட்டதால் எண்ணங்களிலோ மதிப்பீடுகளிலோ மாற்றம் ஏற்பட்டு விட்டதாகக் கொள்ள முடியாது.

பொதுவாக, ஒவ்வொரு காலக்கட்டத்திலும்,  பேச்சு வழக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்னை விட இப்போது இன்னும் சற்று வெளிப்படையாகப் பேசுகிறோம். ஒரு விதத்தில் இது நல்ல மாற்றம் என்று கூடக் கூறலாம்.

மொத்தத்தில் பார்க்கும்போது, கால ஓட்டத்தில் மாறுதல்கள் நிகழ்வதைத் தடுக்க முடியாது. சில மாற்றங்கள் வரவேற்கத் தக்கவைதான்.

ஆயினும் மதிப்பீடுகளின் வீழ்ச்சி கவலை அளிக்கக் கூடியது. மதிப்பீடுகள் வீழ்ச்சி அடைந்து விட்டன என்று ஒரு திரைப்படப் பாடலை வைத்துச் சொல்லவில்லை.

பொதுவாக மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மங்கனப்பான்மை மிகவும் குறைந்து விட்டது. கூட்டுக் குங்கடும்பம் போய், இப்போது கணவன், மனைவி, குழந்தை என்று மூவர் இருக்கும் குடும்பங்களிலேயே, சுதந்திரம் என்ற பெயரில், ஒவ்வொருவரும், குழந்தை உட்பட, தங்கள் தனித்தனமையை காத்துக் கொள்வதில்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

காலம் கெட்டு விட்டது என்ற பொதுவான புலம்பலை நான் ஏற்கவில்லை. ஆனால் நல்ல விஷயங்கள் பல தேய்ந்து வருவது நிச்ச்யம் வருத்தம் அளிக்கத்தான் செய்கிறங்கது. என்னென்ன விஷயங்கள் அவை என்று நான் பட்டியல் போட விரும்பவில்லை. உதாரணத்துக்கு ஒன்றிரண்டைக் குறிப்பிட்டேன்.

எந்தெந்த மாற்றங்கள் நமக்கு நன்மை பயப்பவை என்று நாமே சிந்தித்து அவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எல்லோருக்கும் வர வேண்டும். இது என் விருப்பம்தான். நடைமுறையில் இது நிகழ்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

Thursday, April 9, 2015

காலம் மாறிப் போச்சு!


மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற தத்துவம் புளித்துப் போகும் அளவுக்குப் பேசப்பட்டு விட்டது.

மாற்றத்தைத் தவிர, மாறாத இன்னொரு விஷயம் உண்டு. 'காலம் மாறி விட்டதே' என்று ஒவ்வொரு தலைமுறையும் புலம்பும் பழக்கம்தான் அது. காலம் மாறும் என்பதை நம் நாட்டின் புராணங்களும், இதிகாசங்களும் அறுதியிட்டுச் சொல்லியிருக்கின்றன. ஒவ்வொரு யுகத்திலும் நல்லவை தேய்ந்து அல்லவை பெருகி, கலி யுகத்தில் இது உச்சக்கட்டத்தை எட்டும் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருப்பது,  புராணம் படிக்காதவர்களுக்கும் நன்கு தெரியும். இந்தப் புராணத்தைத்தான் பலரும் பாடிக் கொண்டிருக்கிறார்களே!

'காலம் மாறிப்போச்சு' என்று ஒரு படம் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் வெளி வந்தது. ஜெமினியின் தயாரிப்பில் வெளி வந்த இந்தப் படத்தில் ஜிக்கி பாடிய 'ஏரு பூட்டிப் போவாயே' என்ற பாடல் மிகப் பிரபலமானது. இந்தப் பாடல் காட்சியில் பிரபல இந்தி நடிகை வஹிதா ரஹ்மான் நடித்திருக்கிறார் என்பது சிலருக்கு வியப்பான செய்தியாக இருக்கும். அவர் செங்கல்பட்டில் பிறந்தவர் என்ற (Youtube-இல் ஒருவர் குறிப்பிடப்பட்டிருக்கும்) செய்தி அதை விட ஆச்சரியமாக இருக்கும். இந்தப் பாடல் காட்சியின் காணொளி இணைப்பு இதோ.

https://www.youtube.com/watch?v=9RJfMjq3fcU

இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் காலம் மாறிப் போச்சு என்ற பேச்சு எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாகத்தான். 1996-இல் இதே பெயரில் இன்னொரு தமிழ்ப் படம் வெளியானது. காலம் மாறினாலும், திரைப் படங்கள் எடுக்கப்படும் விதம் மாறினாலும், டைட்டில் மட்டும் மாறவில்லை!

நம் வாழ்க்கை வசதிகளில் குறிப்பாக திரைப்பட இசையில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் வந்திருக்கின்றன என்பதைப் பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ் தயாரித்திருக்கும் சிறகடிப்பேன் என்ற ஆல்பத்தில் 'காலம் மாறிப்போயாச்சே' என்ற பாடலில்  ஒரு தாத்தாவாக அந்தக் கால இசை அமைப்பாளர் விஸ்வநாதனும் அவரது பேத்தியாக பின்னணிப் பாடகி ஸ்ரீஷாவும் பாடல் மூலம் பகிர்ந்து கொள்வதை இந்தக் காணொளியில் காணலாம்.

https://www.youtube.com/watch?v=922IEXhpi_c

காலம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது, நாமும் மாறிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்புறம் ஏன் காலம் மாறிப் போய் விட்டது என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம்?

இதற்கு ஒரு காரணம் உண்டு. சாதாரண மனிதர்கள் 'காலம் மாறிப் போச்சு' என்று சொல்வதில்லை, 'காலம் கெட்டுப் போய் விட்டது' என்றுதான் சொல்வார்கள்.

உண்மையிலேயே காலம் கெட்டு விட்டதா? இதப் பற்றி நாளைய 'இன்று'வில் பார்க்கலாமே!