Saturday, March 17, 2018

24. நீ ரொம்ப அழகா இருக்கே!

ஒரு பெண்ணைப் பார்த்து 'நீ ரொம்ப அழகா இருக்கே!' என்று அவளுடைய காதலனோ அல்லது கணவனோதான் (அதுவும் தனிமையில்தான்) சொல்ல முடியும் என்பது நமது பண்பாடு.( காதலர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த மந்திரச் சொற்களைக் கணவர்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை என்பது வேறு விஷயம்!)

இது போன்ற வாக்கியத்தை இரண்டு பெரிய மனிதர்கள் சமீபத்தில் பயன்படுத்தியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற 23 வயதுப் பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் உணர்ச்சி அலைகளை எழுப்பியது.

பெண்கள் தினத்தன்று சில பெண்களை கௌரவிக்க நடந்த ஒரு விழாவில் பேசிய ஒரு முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி "நிர்பயாவின் அம்மாவின் உடலமைப்பு நன்றாக அமைந்துள்ளதைப் (good physique) பார்க்கும்போது நிர்பயா எவ்வளவு அழகாக இருந்திருப்பாள் என்று என்னால் ஊகிக்க முடிகிறது" என்று கூறியிருக்கிறார். இந்தப் பேச்சை ரசிக்க முடியாமல் விழாவுக்கு வந்திருந்த சில விருந்தினர்கள் வெளியேறியிருக்கிறார்கள்.

ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் "நான் அவரைப் பாராட்டினேன். இதில் என்ன தவறு?" என்று தன் பேச்சை நியாயப்படுத்தி இருக்கிறார் இவர் . "பெண்களுக்கு, குறிப்பாக அழகான பெண்களுக்கு ஆபத்து அதிகம் என்பதை வலியுறுத்தவே இப்படிச் சொன்னேன்" என்கிறார் இவர்.

ஒரு சாதாரண மனிதன் ஒரு பெண்ணைப் பார்த்து "நீங்க அழகா இருக்கீங்க" என்று சொன்னால் ஈவ் டீசிங் என்று சொல்லி அவனைக் கைது செய்து விடுவார்கள். பாலியல் தொந்தரவு போன்ற வழக்குகள் கூட அவன் மீது போடப்படலாம். ஆனால் ஒழிவு பெற்ற காவல்துறை இயக்குனர் ஒருவர் இப்படிப் பேசி விட்டுத் தன் பேச்சை நியாயப்படுத்தி இருக்கிறார்.

இவர் பெண்களுக்கு இன்னொரு அறிவுரையையும் வழங்கி இருக்கிறார். "நீங்கள் பலாத்காரம் செய்யப்பட்டால் பணிந்து போய் விடுங்கள். அப்புறம் (எல்லாம் முடிந்த பிறகு?) புகார் கொடுத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் உங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இருக்காது" என்பது இவரது அறிவுரை! இதுதான் நடைமுறைக்கு உகந்தது என்று இவர் கருதுகிறார் போலும்! இது  எந்த அளவுக்கு ஏற்புடையது என்பதை பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

https://www.vikatan.com/news/india/119378-i-could-imagine-how-beautiful-nirbhaya-is-exdgps-speech-sparks-row.html

தன் பெயர் அடிக்கடி பதித்திரிகைகளில் இடம் பெரும் வகையில் ஏதாவது சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் வழக்கமுடைய தமிழ்நாட்டின் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது அங்கிருந்த ஒரு பெண் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் "உங்க கண்ணாடி அழகா இருக்கு" என்று சொல்லி இருக்கிறார்.

"அதை நான் தினமும்தான் அணிகிறேன். கூட்டத்தில் என்ன நடந்தது?" என்று அந்தச் செய்தியாளர் கேட்டதற்கு, அமைச்சர் "இன்னிக்கு உங்களுக்கு கண்ணாடி அழகா இருக்கு" என்று சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார்.

பெண் ஊடகவியலாளர்கள் மையம் இதற்குக்  கண்டனம் தெரிவித்ததை அடுத்து அமைச்சர் "அரசியல் கேள்விகளைத் தவிர்க்கத்தான் அப்படிச் சொன்னேன்" என்று சொல்லி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

https://www.vikatan.com/news/coverstory/119374-shocking-reply-from-minister-vijayabaskar-to-women-journalist.html

அரசியல் கேள்விகளைத் தவிர்க்க அமைச்சர் கைப்பிடித்த வழி புதுமையானதுதான். ஆனால் இது போன்ற கருத்துக்கள் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு சங்கடத்தை விளைவிக்கக் கூடும் என்பதை அமைச்சர் ஏன் உணரவில்லை?

திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி அமைச்சர் விஜயபாஸ்கரைக் கடுமையாக விமரிசனம் செய்து வருகிறார். அடுத்த முறை விஜயபாஸ்கர் அவர்கள் ஸ்டாலின் அவர்களைச் சந்திக்கும்போது "ஸ்டாலின்  அண்ணே! உங்களுக்கு கூலிங் கிளாஸ்ரொம்ப அழகா இருக்கு!" என்று சொல்லிப் பார்க்கலாம்.

இதைக் கேட்டு ஸ்டாலின் அவர்கள் வாயடைத்துப் போய் விஜயபாஸ்கர் அவர்களை விமரிசனம் செய்வதை நிறுத்தி விடக்  கூடும்!

Thursday, March 15, 2018

23. தமிழுக்கும் கூகிள் என்று பேர்!

ஏதாவது தகவல் வேண்டுமென்றால் நம்மில் பலரும் கூகிளைத் தேடித் போவோம். ஆனால் கூகிள் என்னைத் தேடி வந்த அதிசயம் 13-03.2018 அன்று நடந்தது.

என்னை என்றால் என்னை மட்டும் அல்ல - என் போன்று தமிழ் வலைப்பதிவுகளில் எழுதும் பலரையும்தான்.

கூகிளின் அட்சென்ஸ்  என்ற சேவையைப் பற்றிப் பலரும் அறிந்திருப்பார்கள். உங்கள் வலைத்தளத்திலோ (website) அல்லது நீங்கள் பயன்படுத்தும் கூகிளுக்குச் சொந்தமான பிளாகர்(blogger) போன்ற வலைத்தளங்களிலோ விளம்பரம் செய்து கொள்ள கூகிளுக்கு நீங்கள் அனுமதி அளித்தால், அந்த வலைத்தளங்களில் கூகிள் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை கூகிள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும். இதற்கு நீங்கள் கூகிளின் அட்சென்ஸ் சேவைக்கணக்கு ஓன்றைத் துவங்க வேண்டும்.

 youtubeஇல் நீங்கள் வீடியோக்களை வெளியிட்டால், அங்கேயும் அட்சென்ஸ் வசதி உண்டு.

இத்தனை காலமாக இந்த அட்சென்ஸ் வசதி ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளுக்குத்தான் உண்டு என்ற நிலை இருந்தது. சில வருடங்களுக்கு முன் ஹிந்தியும், சமீபத்தில் பெங்காலியும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

9.2.18இலிருந்து தமிழ் வலைத்தளங்களுக்கு அட்சென்ஸ் விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது.

இது பற்றி விளக்க 13.3.18 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாட் ரிஜென்சி ஓட்டலில் 'Google for தமிழ்' என்ற தலைப்பில் தமிழில் எழுதும் பல வலைப்பதிவாளர்களை அழைத்து, கூகிள் நிறுவனம் ஒரு கருத்தரங்கு நடத்தியது கூகிள். இதைத்தான் கூகிள் என்னைத் தேடி வந்ததாக எழுதினேன்!

இந்தக் கருத்தரங்கில் கூகிளின் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு பல பயனுள்ள விஷயங்களைத் தெரிவித்தனர்  அவற்றின் சுருக்கம் இதோ.

1. இணையத்தளத்தைப் பயன்படுத்துவோரில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் விவரங்களைத் தேடுபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் இணையதளங்களில் தமிழில் எழுதப்படும் கட்டுரைகள், விவரங்கள்,  பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட  பிறவகைப் படைப்புகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது.

2. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உள்ள வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிடுவதில் விளம்பரதாரர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

3. கைபேசிகள் மூலம் இணையத்தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வலைப்பதிவுப்  பக்கங்கள் கைபேசிகளின் சிறிய திரையில் நன்கு தெரியுமாறு அமைக்கப்படுவதற்கான நுணுக்கமான வழிமுறைகள் விளக்கப்பட்டன.

4. அட்சென்ஸைச் சரியாகப் பயன்படுத்தும் வகைகள் விளக்கபட்டன.

5. அட்சென்ஸின் கொள்கைகள், வரைமுறைகள் ஆகியவற்றை முறையாகப் பின்பற்றப்பட  வேண்டியதன் அவசியம், தவிர்க்கப்பட வேண்டிய தவறுகள், விதிமீறல்கள் ஆகியவை பற்றி விளக்கப்பட்டன.

விளக்கப்பட்ட வேண்டிய  விஷயங்களைத் தலைப்பு வாரியாகப் பிரித்து ஒவ்வொரு தலைப்பைப் பற்றியும் ஒரு கூகிள் அதிகாரி சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கினார். இதற்காக கூகிளில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் பல்வேறு நகரங்களிலிருந்தும் வந்திருந்தனர். சில உரைகள் ஆங்கிலத்திலும், சில தமிழிலும் இருந்தன.

ஒவ்வொருவரும் தாங்கள் பேச வேண்டிய தலைப்பு குறித்த ஆழ்ந்த அறிவு பெற்றிருந்ததுடன், எல்லாவிதமான கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் தங்களைச் சிறப்பாகத் தயார் படுத்திக் கொண்டிருந்தனர். பங்கேற்றவர்கள் கேள்விகளுக்குத் தெளிவாக பதிலளித்தனர். கேள்வி கேட்டவர்களில் சிலர் மேலும் மேலும் துணைக்கேள்விகளைக் கேட்டபடியே இருந்தபோதும் அவற்றுக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்த கூகிள் அதிகாரர்களின் பாங்கு பாராட்டுக்குரியது.

கூகிளுடன் இணைந்து பணி புரியும் ஒரு விளம்பரதாரர், ஒரு பதிப்பாளர், ஒரு தொழில் நுட்ப ஆலோசகர்,ஒரு யூ டியூப் சேனலை வெற்றிகரமாக நடத்தி வரும் ஒருவர், ஒரு கூகிள் அதிகாரி  ஆகியோர் பங்கேற்ற ஒரு கருத்துரையாடலும் நிகழ்ச்சியில் இடம் பெற்றது.

செவிக்கு உணவு இல்லாதபோது வயிற்றுக்கு ஈவது என்ற வள்ளுவர் வாக்கை நிறைவேற்றுவது போல் நிகழ்ச்சி துவங்கும் முன் காலை உணவு, தேநீர் இடைவேளையின்போது சிற்றுண்டிகளுடம் கூடிய டீ, காப்பி, ஜூஸ் வகையறாக்கள், மதிய உணவு இடைவேளையின்போது கனமான விருந்து, நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஒரு கனமான தேநீர் விருந்து என்று விருந்தோம்பலால் அனைவரையும் திணறடித்து விட்டார்கள்.

திறமையம், உற்சாகமும் நிறைந்த, சாதனை படைத்து வரும் பல வலைப்பதிவாளர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் சந்தித்தது எனக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

சென்னையில் இப்படி ஒரு கருத்தரங்கை நடத்தி அதில் நான் பங்கு பெற வாய்ப்பளித்த கூகிள் நிறுவனத்துக்கும், எனக்கு அழைப்பு கிடைக்கக் காரணமாக இருந்த  இண்டிபிளாகர் அமைப்புக்கும் என் மனமார்ந்த நன்றி. 

Saturday, March 10, 2018

22. மறுபக்கம்!


எல்லா விஷயங்களுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. பல சம்பவங்களிலும் மறுபக்கத்தைப்  பார்க்கும் ஒரு (வேண்டாத!) பழக்கம் என்னிடம் உண்டு.

'The early bird catches the worm' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இதன் பொருள் '(காலையில்) சீக்கிரம் கிளம்பும் பறவைதான் புழுவைப் பிடிக்கும்' என்பது. காலையில் சீக்கிரம் எழுந்து பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகச் சொல்லப்படும் பழமொழி இது. இந்தப் பழமொழியைக் கேட்டபோது ஒருமுறை எனக்கு 'The worm was caught because it was an early worm.' என்ற மறுமொழி தோன்றியது! புழு காலையில் சீக்கிரமே எழுந்து வெளியே கிளம்பியதால்தானே அது பிடிபட்டது?

தர்க்க ரீதியாக இது சரியில்லை என்பது வேறு விஷயம்.ஏனெனில் தாமதமாக எழுந்து வெளிக் கிளம்பினாலும் புழு  ஏதாவது ஒரு பறவைக்கு இரையாக நேரிடும். புழுக்கள் பறவைகளுக்கு இரையாக வேண்டும் என்ற நியதி நிலவும் உலகில் புழுக்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை! தாமதமாகக் கிளம்பினால்  இன்னும் சற்று நேரம் உயிருடன் இருக்கலாம்! ஆயினும் மிகச் சிறிய ஆயட்காலமே உள்ள ஒரு புழுவுக்கு சில மணி நேரங்கள் அதிகம் வாழ்வது பெரிய விஷயமாக இருக்கலாம்!

இதுபோன்ற சிந்தனைகளைக் குதர்க்கம் என்று சிலர் கருதலாம். அவர்களுடன் நான் தர்க்கம் செய்யப் போவதில்லை!

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் சாலையைக் கடக்கும்போது பேருந்து ஒன்றினால் மோதப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்த என்னால் அந்தப் பேருந்தை ஒட்டியவரைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. விபத்து நேர்ந்தது அவரது கவனக்குறைவாலோ, அலட்சியத்தாலோ, திமிரினாலோ கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் அவரும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டுத்தானே இருக்கிறார்?

ஒருவேளை விபத்து நடந்ததற்கு அவர் காரணம் இல்லை என்றால் அவர் தவறு செய்யாமலே தண்டனை பெற்றவர் ஆகிறார். தண்டனை என்று இங்கே நான் சட்ட ரீதியாக அவருக்கு கிடைக்கக்கூடிய தண்டனையைக்  குறிப்பிடவில்லை. அவர் தண்டனை பெறலாம் அல்லது அவர் மீது தவறு இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்படலாம். ஆனால் இன்னும் சிறிது காலத்துக்கு அவர் அனுபவிக்கப் போகும் உடல் மற்றும் மனரீதியான துன்பங்களை நினைக்கும்போது அவர் மீதும்  நாம் பரிதாபப்பட வேண்டும் அல்லவா?

அவர் தவறு செய்திருந்தாலும், செய்யவில்லை என்றாலும் அவர் குடும்பத்தை எண்ணிப் பாருங்கள்.அப்பா வீட்டுக்கு வருவார் என்று எண்ணிக் காத்திருந்த அவர் குழந்தைகளின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

இந்த உதாரணத்தை விரிவாக்கிப் பார்க்கும்போது கொலை போன்ற கொடிய குற்றங்களை செய்ததாகக் கைது செய்யப்படும் நபர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படத்தான் செய்கின்றனர்.

ஒருவர் பாலியல் குற்றத்துக்காகக் கைது செய்யப்படும்போது அவர் குடும்பத்தினருக்கு ஏற்படும் அவமானம், துன்பம் ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள்.

ஒரு தவறு நடக்கும்போது பாதிக்கப்பட்டவர்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் ஒருபுற ம். இவர்களுடன் நாம் மனதளவில் நெருங்கி இவர்கள் துன்பத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

ஆனால் தவறுக்குக் காரணமானவர்கள் என்று கருதபடுபவர்களுக்கு  நெருக்கமானவர்களுக்கு ஏற்படும் சங்கடங்களையும், துன்பங்களை நம்மில் பலர் நினைத்துப் பார்ப்பதில்லை என்பது என் கருத்து.

ஆங்கிலத்தில் aggressor, victim என்ற சொற்கள் பயன்படுத்தப்படுவது உண்டு. தாக்கியவர், தாக்குதலுக்கு பலியானவர் என்ற இரு தரப்பினரைக் குறிக்கும் சொற்கள் இவை. ஆனால் aggressor க்கு (தாக்குதல் நடத்தியவர் அல்லது நடத்தியதாகக் கருதப்பட்டவருக்கு) நெருக்கமானவர்கள் கூட victim (பலி) ஆகிறார்கள். ஆங்கிலத்தில் இதை  collateral damage என்று சொல்வார்கள்.

ஒருமுறை ஒரு வேலையாக ஒரு காவல் நிலையத்துக்குச் சென்றபோது, அங்கே ஒரு காவலர் சில விசாரணைக் கைதிகளை 'விசாரித்து'க் கொண்டிருந்தார். அப்போது அந்தக் கைதிகளில் ஒருவர் மீது புகார் கொடுத்த ஒருவர் அந்தக் கைதியின் மகனுக்கு சாப்பாட்டுக்காகப் பத்து ரூபாய் கொடுத்ததாகக் காவலரிடம் கூறினார். (இது 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது பத்து ரூபாய்க்குச் சிறிதளவாவது உணவு கிடைத்திருக்கும்)

ஒரு பக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மறுபக்கத்தைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறார் அவர் என்று எனக்குத் தோன்றியது!

Sunday, March 4, 2018

21. கேரள யாத்திரை - 4

24.01.18 - நான்காம் நாள் 
நான்காம் நாளான இன்று சோட்டாணிக்கரா பகவதி அம்மானின் அதிகாலை தரிசனத்துடன் தொடங்கியது. பெரிய கோவிலான இதில் மேலக்காவு பகவதி கீழக்காவு பகவதி என்று இரண்டு சந்நிதிகள் உள்ளன. மேலக்காவு பகவதி காலையில் சாஸ்வதியாகவும்,மதியத்தில் மகாலக்ஷ்மியாகவும்,இரவில் துர்க்கையாகவும் விளங்குவதாக ஐதீகம்.

தரைமட்டத்துக்குக் கீழே உள்ள கீழக்காவு பகவதி பத்ரகாளி அல்லது மஹாகாளியாக உக்ர வடிவில் இருக்கிறார். (கொடுங்காளூர் பகவதி கோவிலிலும் இது போல் ருத்ர பகவதி, சாந்த பகவதி என்று இரண்டு பகவாதிகள் இருப்பதுடன் இதை ஒப்பிடலாம்.) இங்கே கீழக்காவு பகவதியை தரிசிக்கப் பல படிகள் கீழே இறங்கிச் சென்றபோது, காடாம்புழா பகவதியை தரிசிக்கவும் கீழே இறங்கிச் சென்றது நினைவுக்கு வந்தது.

சக்தி தரிசனத்துக்குப் பின் சிவ தரிசனம்.இன்று முற்பகலில் வைக்கம் மகாதேவர் கோவில், காடந்தேத்தி, ஏத்தமானூர் மற்றும் கடப்பத்தூர் சிவன் கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்தோம்.

வைக்கம், காடந்தேத்தி, ஏத்தமானூர் கோவில்கள் பற்றி எங்கள் வழிகாட்டி தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் விளக்க உரையை இந்த வீடியோவில் காணலாம்


கேரளாவில் உள்ள எல்லா சிவன், பகவதி கோவில்களும் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை என்று ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால் மீனாட்சி நதிக்கரையில் அமைந்துள்ள கடப்பத்தூர் சிவன் கோவில் மட்டும் பரசுராமர் காலத்துக்கு முன்பே உருவாக்கப்பட்டது என்று நம்பப் படுகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உண்டு.

கௌதமர் என்ற முனிவர் (கௌதமர் என்ற பெயரில் பலமுனிவர்கள் இருந்திருக்கிறார்கள்.) தன் தவத்துக்கு இடையூறு செய்த ஒரு பசுவின் மீது ஒரு புல்லைத் தூக்கி எறிந்தார். அவரது தவவலிமையால் அந்தப் புல் நெருப்பாக மாறிப் பசுவை மாய்த்து விட்டது.

தன் பாவத்தைப் போக்கிக் கொள்வதற்கான வழி பற்றி அவர் இன்னொரு முனிவருடன் ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, பசுவாக வந்த காமதேனுவும் முனிவரின் தவத்துக்குத் தான் இடையூறு செய்ததற்குப் பிராயச் சித்தம் செய்ய விரும்பி அவர்களுடன் சேர்ந்து கொண்டது.

இவர்கள் மூவரும் விச்வாமித்திரரிடம் ஆலோசனை கேட்க, அவரும் இவர்கள் மூவரும் சேர்ந்து தவம் செய்வதற்கேற்ற இடம் தேடி உலகெங்கும் சுற்றி இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே இந்த ஆலயத்தை நிர்மாணித்தார் என்பது வரலாறு.

சக்தி, சிவ தரிசனத்தைத் தொடர்ந்து மாலையில் விஷ்ணு தரிசனம். பெருமாள் அற்புத நாராயணனாக சேவை சாதிக்கும் திருக்கடித்தானம், கோலப்பிரானாகக் காட்சி தரும் திருவல்ல வாழ் (திருவல்லா) ஆகிய திவ்யதேசங்களை தரிசனம் செய்த பின் இரவு பம்பை நதிக்கரையில் அமைந்துள்ள ஆறன்முளா என்று அழைக்கப்படும் திருவாறன்விளையில்  தங்கினோம். கோவில் நடை சாற்றுவதற்கு முன்பு திருவாறன்விளை பார்த்தசாரதிப் பெருமாளின் சந்தனக்காப்பு தரிசனமும் கிடைத்தது.

25.01.18. - ஐந்தாம் நாள் 
இன்று காலை திருவாறன்விளை  பார்த்தசாரதிப் பெருமாளின் விஸ்வரூப  தரிசனத்துடன் தொடங்கியது. பிறகு திருச்செங்கண்ணூர்  (இமயவரப்பன்), திருப்புலியூர் (மாயப்பிரான்), திருவண்வண்டூர் (பாம்பணையப்பன்)ஆகிய திவ்யதேசங்களை தரிசித்த பின் திருவனந்தபுரம் விரைந்தோம்.

மாலையில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபரை தரிசனம் செய்து விட்டுத் திருவனந்தபுரத்தில் தங்கினோம்.

26.01.18 - ஆறாம் நாள் 
அதிகாலையில் திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி தமிழ்நாட்டில் மார்த்தாண்டம் அருகே உள்ள திருவட்டாறு திவ்யதேசத்துக்குச் சென்று ஆதிகேசவப் பெருமாளை தரிசித்தோம். இத்துடன் இந்த யாத்திரை இனிதாக முடிந்தது. 

Saturday, March 3, 2018

20. கேரள யாத்திரை - 3

23.01.18 - மூன்றாம் நாள்
குருவாயூரிலிருந்து அதிகாலை கிளம்பி கொடுங்காளுரில் உள்ள  உள்ள திருவஞ்சிக்குளம் சிவாலயத்துக்குச் சென்றோம். சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தலம் இது. பாடல் பெற்ற சிவனாலயங்கள் 276இல் கேரளத்தில் உள்ள ஒரே தலம் இதுதான்.

லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமான் சந்நிதி தவிர, சங்கரநாராயணர், பார்வதி, ராமர், கோசாலகிருஷ்ணன், கிராதமூர்த்தி, வடக்குநாதர், சாஸ்தா, கணபதி ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. ஆதிசங்கரர், சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

இங்கிருந்து கொடுங்காளூர் பகவதி கோவிலுக்குச் சென்றோம். ருத்ர பகவதி, சாந்த பகவதி என்று இரண்டு பகவதி விக்கிரகங்கள் இங்கே இருக்கின்றன. இந்தக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. ஆயினும் தரிசனத்துக்கு வருபவர்களை ஒழுங்கு படுத்தி அனுப்பும் முறை இல்லாததாலும், பக்தர்களின் முண்டியடித்துச் செல்லும் நடைமுறையாலும் தள்ளுமுள்ளுதான் அதிகம். கேரளாவில் உள்ள பல கோவில்களில் இந்த நிலைமைதான்!

கேரளாவில் பரசுராமர் 36 பகவதி கோவில்களை நிறுவியிருப்பதாகவும் , எல்லாக் கோயில்களிலும் ஆதிசங்கரர் யந்திரங்களை பிரதிஷ்டை செய்திருப்பதாகவும் எங்கள் வழிகாட்டி ரமேஷ் கூறினார். யந்திரங்களால் ஈர்க்கப்பட்டுத்தான் இந்தக்  கோவில்களுக்கு பக்தர்கள்  அதிகம் வருவதாகவும் அவர் கூறினார்.

அடுத்து நாங்கள் சென்றது ஆதிசங்கரர் பிறந்த இடமான காலடிக்கு. இந்த மகான் பிறந்த இல்லம்  ஆதிசங்கரர் ஜென்மபூமி என்ற பெயரில் ஒரு நினைவிடமாக சிருங்கேரி மடத்தால் உருவாக்கப் பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

உள்ளே  வைஷ்ணவி, பிரம்மி, சாமுண்டி ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இவர்களின் முக்கியத்துவம் பற்றிய குறிப்புப் பலகைகள் வைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

சங்கரரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாக சுவரில் வரையப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்கள், அவற்றின் வழிமுறைகள் பற்றிய ஒரு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குப் பின்புறமாக பூர்ணா நதி ஓடுகிறது. இந்த நதி முதலில் சூர்ணா நதி என்ற பெயரில் சற்றுத் தொலைவில் ஓடிக்கொண்டிருந்ததாகவும், ஆதிசங்கரர் இந்த நதியைத் தம் இல்லத்துக்கு அருகில் ஓடும்படி செய்ததாகவும் அதன் பிறகு இந்த நதி பூர்ணா நதி என்று அழைக்கப்பட்டதாகவும் எங்கள் வழிகாட்டி ரமேஷ் கூறினார்.

பூர்ணா நதிக்கருகே ஆதிசங்கரரின் பிருந்தாவனம் உள்ளது.ஆதிசங்கரரின் குடும்பத்தின் குலதெய்வமான கிருஷ்ணர் கோவிலும்  அருகில் இருக்கிறது.

நுழைவாயில் 


சங்கரர் வாழ்க்கையைக் குறிக்கும் ஓவியம் 
சங்கரர் வாழ்க்கையைக் குறிக்கும் ஓவியம் 


நந்தவனம் 
பூர்ணா நதி 


பூர்ணா நதி
பூர்ணா நதி


கிருஷ்ணர் கோவில் 
கிருஷ்ணர் கோவில் 




மாலையில் திருமூழிக்களம், திருக்காட்கரை ஆகிய திவ்யதேசங்களுக்குச் சென்று தரிசனம் செய்தபின் சோ ட்டானிக்கராவில் இரவு தங்கினோம்.

(அடுத்த பகுதியுடன்  இந்தக் கட்டுரை நிறைவு பெறும்.)


Thursday, March 1, 2018

19. கேரள யாத்திரை - 2

திருவித்துவக்கோடு 
22.01.18 - இரண்டாம் நாள் 
அதிகாலை பாலக்காட்டிலிருந்து கிளம்பி திருவித்துவக்கோடு ஆலயத்துக்குச் சென்றோம். பாராதப் புழா நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த அற்புதமான திவ்ய தேசத்தை அதிகாலையில் தரிசனம் செய்தது  மனதுக்கு அமைதியையும், பரவசத்தையும் ஊட்டுவதாக இருந்தது.

இங்கிருந்து கிளம்பி திருச்சூர் அருகில் உள்ள வடக்குநாதன்  கோவில் என்னும் சிவாலயத்துக்குச் சென்றோம். நந்திதேவரால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கோவிலில் சிவபெருமான் மலை வடிவில் இருக்கிறார். விடைக்குன்று நாதன் என்ற பெயர் மருவி வடக்குநாதன் என்று ஆகி விட்டதாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயம் பற்றி எங்கள் வழிகாட்டி தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் விளக்கவுரையைக் கீழே காணலாம்.

இதன் பிறகு நாங்கள் சென்றது கடம்புழா பகவதி கோவிலுக்கு. கோவில் தரைமட்டத்துக்குச் சற்று கீழே அமைந்துள்ளது. கோவில் உள்ளே ஒரு காலிப் பையை கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை.

அடுத்து நாங்கள் சென்றது திருநாவாய் திவ்யதேசத்துக்கு. பாரதப்புழா நதியின் இன்னொரு கரையில் அமைந்துள்ள இந்த திவ்யதேசப் பெருமாள் நாவாய் முகுந்தனின் அற்புத சேவை கிடைக்கப் பெற்றோம். கேரள திவ்யதேசங்களில் தாயாருக்கென்று தனி சந்நிதி உள்ள ஒரே கோயில் இதுதான். 

திருநாவாய்




மாலையில் குருவாயூரப்பன் ஆலய தரிசனம். இந்தக் கோவிலுக்குள் கைபேசி , ஒலி எழுப்பும் கைக்கடிகாரம் ஆகியவற்றைக் கண்டிப்பாக அனுமதிப்பதில்லை. பெரிய ஆலயம். ஆனால் கர்ப்பக்கிருகத்தில் குருவாயூரப்பன் மிகச் சிறிய வடிவில் சேவை சாதிக்கிறார். கர்ப்பக்கிருகத்துக்கு வெளியே நின்று பார்க்கும்போது பெருமாளின் திருவுருவம் கர்ப்பக்கிருக இருட்டில்  தீபங்களின் ஒளியில் ஓரளவுதான் கண்ணுக்குப் புலப்படுகிறது. .

தரிசனத்துக்காக வரிசையில் நின்றபோது உற்சவரை யானை மீது வைத்து கோவில் பிரகாரத்துக்குள்ளேயே அழைத்து வந்த அரிய காட்சியைக் காண முடிந்தது. மூலவரே மிகச் சிறிய .வடிவத்தில் இருக்கும்போது அதைவிடச் சிறிய உற்சவ மூர்த்தியைத் துணியால் மூடி யானை மீது வைத்து எடுத்துச் சென்றார்கள்.

இந்தக் கோவில் பற்றித் தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் தொகுப்புரையைக் கீழே உள்ள இரண்டு வீடியோக்களில் காணலாம். 



குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த பிறகு அருகில் உள்ள மம்மியூர் சிவன் கோவிலையும் தரிசித்தால்தான் தரிசனம் பூர்த்தியாகும் என்று குருவாயூர் கோயிலுக்குள்ளேயே எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோவில் குருவாயூரப்பன் கோவிலிலிருந்து சிறிது தூரத்தில்தான் உள்ளது. மம்மியூர் சிவன் கோவிலிலும் தரிசனம் செய்து கொண்டோம். இது சிவா-விஷ்ணு கோவில் போல் இரட்டைக்கோயிலாக அமைந்துள்ளது. சிவன் கோவிலை ஒட்டியே விஷ்ணு கோயிலும் அமைந்துள்ளது. 

குருவாயூரில் ஒரு வெங்கடாசலபதி ஆலயமும் அமைந்துள்ளது.;ரயில் நிலையத்துக்கு மறுபுறம் அமைந்துள்ள இந்தக் கோவிலில் திருப்பதி வெங்கடாசலபதியின் விக்கிரகம் போன்ற தோற்றத்தில் விக்கிரகம் அமைந்துள்ளது. இது குருவாயூர் கோவிலிலிருந்து நன்கு அல்லது ஐந்து கிலோமீட்டர்கள் தள்ளி உள்ளது.

இரவில் குருவாயூரிலேயே தங்கினோம்.
இரண்டாம் நாள் யாத்திரை இத்துடன் நிறைவு பெற்றது.