Thursday, March 15, 2018

23. தமிழுக்கும் கூகிள் என்று பேர்!

ஏதாவது தகவல் வேண்டுமென்றால் நம்மில் பலரும் கூகிளைத் தேடித் போவோம். ஆனால் கூகிள் என்னைத் தேடி வந்த அதிசயம் 13-03.2018 அன்று நடந்தது.

என்னை என்றால் என்னை மட்டும் அல்ல - என் போன்று தமிழ் வலைப்பதிவுகளில் எழுதும் பலரையும்தான்.

கூகிளின் அட்சென்ஸ்  என்ற சேவையைப் பற்றிப் பலரும் அறிந்திருப்பார்கள். உங்கள் வலைத்தளத்திலோ (website) அல்லது நீங்கள் பயன்படுத்தும் கூகிளுக்குச் சொந்தமான பிளாகர்(blogger) போன்ற வலைத்தளங்களிலோ விளம்பரம் செய்து கொள்ள கூகிளுக்கு நீங்கள் அனுமதி அளித்தால், அந்த வலைத்தளங்களில் கூகிள் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை கூகிள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும். இதற்கு நீங்கள் கூகிளின் அட்சென்ஸ் சேவைக்கணக்கு ஓன்றைத் துவங்க வேண்டும்.

 youtubeஇல் நீங்கள் வீடியோக்களை வெளியிட்டால், அங்கேயும் அட்சென்ஸ் வசதி உண்டு.

இத்தனை காலமாக இந்த அட்சென்ஸ் வசதி ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளுக்குத்தான் உண்டு என்ற நிலை இருந்தது. சில வருடங்களுக்கு முன் ஹிந்தியும், சமீபத்தில் பெங்காலியும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

9.2.18இலிருந்து தமிழ் வலைத்தளங்களுக்கு அட்சென்ஸ் விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது.

இது பற்றி விளக்க 13.3.18 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாட் ரிஜென்சி ஓட்டலில் 'Google for தமிழ்' என்ற தலைப்பில் தமிழில் எழுதும் பல வலைப்பதிவாளர்களை அழைத்து, கூகிள் நிறுவனம் ஒரு கருத்தரங்கு நடத்தியது கூகிள். இதைத்தான் கூகிள் என்னைத் தேடி வந்ததாக எழுதினேன்!

இந்தக் கருத்தரங்கில் கூகிளின் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு பல பயனுள்ள விஷயங்களைத் தெரிவித்தனர்  அவற்றின் சுருக்கம் இதோ.

1. இணையத்தளத்தைப் பயன்படுத்துவோரில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் விவரங்களைத் தேடுபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் இணையதளங்களில் தமிழில் எழுதப்படும் கட்டுரைகள், விவரங்கள்,  பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட  பிறவகைப் படைப்புகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது.

2. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உள்ள வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிடுவதில் விளம்பரதாரர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

3. கைபேசிகள் மூலம் இணையத்தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வலைப்பதிவுப்  பக்கங்கள் கைபேசிகளின் சிறிய திரையில் நன்கு தெரியுமாறு அமைக்கப்படுவதற்கான நுணுக்கமான வழிமுறைகள் விளக்கப்பட்டன.

4. அட்சென்ஸைச் சரியாகப் பயன்படுத்தும் வகைகள் விளக்கபட்டன.

5. அட்சென்ஸின் கொள்கைகள், வரைமுறைகள் ஆகியவற்றை முறையாகப் பின்பற்றப்பட  வேண்டியதன் அவசியம், தவிர்க்கப்பட வேண்டிய தவறுகள், விதிமீறல்கள் ஆகியவை பற்றி விளக்கப்பட்டன.

விளக்கப்பட்ட வேண்டிய  விஷயங்களைத் தலைப்பு வாரியாகப் பிரித்து ஒவ்வொரு தலைப்பைப் பற்றியும் ஒரு கூகிள் அதிகாரி சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கினார். இதற்காக கூகிளில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் பல்வேறு நகரங்களிலிருந்தும் வந்திருந்தனர். சில உரைகள் ஆங்கிலத்திலும், சில தமிழிலும் இருந்தன.

ஒவ்வொருவரும் தாங்கள் பேச வேண்டிய தலைப்பு குறித்த ஆழ்ந்த அறிவு பெற்றிருந்ததுடன், எல்லாவிதமான கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் தங்களைச் சிறப்பாகத் தயார் படுத்திக் கொண்டிருந்தனர். பங்கேற்றவர்கள் கேள்விகளுக்குத் தெளிவாக பதிலளித்தனர். கேள்வி கேட்டவர்களில் சிலர் மேலும் மேலும் துணைக்கேள்விகளைக் கேட்டபடியே இருந்தபோதும் அவற்றுக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்த கூகிள் அதிகாரர்களின் பாங்கு பாராட்டுக்குரியது.

கூகிளுடன் இணைந்து பணி புரியும் ஒரு விளம்பரதாரர், ஒரு பதிப்பாளர், ஒரு தொழில் நுட்ப ஆலோசகர்,ஒரு யூ டியூப் சேனலை வெற்றிகரமாக நடத்தி வரும் ஒருவர், ஒரு கூகிள் அதிகாரி  ஆகியோர் பங்கேற்ற ஒரு கருத்துரையாடலும் நிகழ்ச்சியில் இடம் பெற்றது.

செவிக்கு உணவு இல்லாதபோது வயிற்றுக்கு ஈவது என்ற வள்ளுவர் வாக்கை நிறைவேற்றுவது போல் நிகழ்ச்சி துவங்கும் முன் காலை உணவு, தேநீர் இடைவேளையின்போது சிற்றுண்டிகளுடம் கூடிய டீ, காப்பி, ஜூஸ் வகையறாக்கள், மதிய உணவு இடைவேளையின்போது கனமான விருந்து, நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஒரு கனமான தேநீர் விருந்து என்று விருந்தோம்பலால் அனைவரையும் திணறடித்து விட்டார்கள்.

திறமையம், உற்சாகமும் நிறைந்த, சாதனை படைத்து வரும் பல வலைப்பதிவாளர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் சந்தித்தது எனக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

சென்னையில் இப்படி ஒரு கருத்தரங்கை நடத்தி அதில் நான் பங்கு பெற வாய்ப்பளித்த கூகிள் நிறுவனத்துக்கும், எனக்கு அழைப்பு கிடைக்கக் காரணமாக இருந்த  இண்டிபிளாகர் அமைப்புக்கும் என் மனமார்ந்த நன்றி. 

No comments:

Post a Comment