Thursday, May 10, 2018

25. பத்ரிநாத் யாத்திரை 1 - வைகுண்டநாதர், பாலாஜி தரிசனம்

உறவினர்களான 15 பேர் பத்ரிநாத் யாத்திரை செல்லத் திட்டமிட்டு தில்லியில் உள்ள ஒரு அனுபவம் வாய்ந்த யாத்திரை அமைப்பாளரின் யாத்திரைக் குழுவில் பதிவு செய்து கொண்டோம்.

சென்னை, பெங்களூரு, கோவை, டில்லி போன்ற பல இடங்களிலிருந்து பத்ரிநாத்  யாத்திரையை மேற்கொண்ட சுமார் 70 பேர், 1.5.18 அன்று மதியம் தில்லி பேர் சராயில் உள்ள வேதாந்த தேசிகர் சாலையில் உள்ள வைகுந்தநாதர் ஆலயத்துக்குள் அமைந்திருக்கும் ஆண்டவன் ஆசிரமத்தில் குழுமினோம். (தில்லியில் வேதாந்த தேசிகர் பெயரில் ஒரு முக்கிய சாலை அமைந்திருப்பது ஒரு ஆனந்தமான அதிசயம்!)

வைகுண்டநாதனான திருமால் கோவில் கொண்டிருக்கும் பத்ரிநாத் யாத்திரை தில்லியில் உள்ள வைகுண்டநாதர் ஆலயத்திலிருந்து துவங்கியது பொருத்தம்தானே!

மாலை ஆறு மணிக்கு வைகுண்டநாதருக்கு அர்ச்சனை செய்து வழிபட்ட பின், இரண்டு வேன்கள், ஒரு பஸ்ஸில் எங்கள் குழு கிளம்பியது. (இந்தக் கோவிலில் வைகுண்டநாதர் தவிர, சுதர்சனர் மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதிகளும் உள்ளன.)

யாத்திரை அமைப்பாளர் திரு நரசிம்மன், அவரது குடும்பத்தினர் சிலருடன் எங்களுடன் பயணித்தார். அடுப்பு, சமையல் வாயு, பாத்திரங்கள், பிற உபகரணங்கள், மளிகை சாமான்கள் ஆகியவற்றுடன் சமையல் குழுவினர் தனி வண்டியில் வந்தனர்.

முதலில் ஆர் கே புரத்தில் உள்ள  பாலாஜி மந்திருக்குச் சென்று  அங்கு அருள் பாலிக்கும் வெங்கடாசலபதியை தரிசித்தோம். இந்தக் கோவிலில், பத்மாவதித் தாயார், பூவராகர், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், ராமானுஜர், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் ஆகியோர் சந்நதிகளும் உள்ளன.

இந்தக் கோவிலிலும் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து  வழிபட்டபின், கோவில் வளாகத்திலேயே இரவு உணவை முடித்துக் கொண்டு இரவு சுமார் ஒன்பதரை மணிக்கு ரிஷிகேஷ் நோக்கிப் பயணித்தோம்.







,

No comments:

Post a Comment